சூலூர் சிறுமி கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் ஆறுதல் தெரிவித்து, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சிறுமி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்தார். புகார் அளிக்கப்படுவதற்கு முன்பே சம்பவம் நடைபெற்றிருப்பது துரதிருஷ்டவசமானது என்றும் கூறினார்.

இந்த வழக்கில் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை துரிதமாக கைது செய்துள்ளனர். கைதான இருவர் நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டுள்ளனர். வழக்கின் விசாரணை வேகமாக முன்னெடுக்கப்படும். உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர அரசு உறுதியாக செயல்படும். இதுபோன்ற சம்பவம் இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதி கொண்டுள்ளதாகவும் கூறினார். குற்றம் செய்பவர்களுக்கு சட்டத்தின் மீது பயம் இருக்க வேண்டியது அவசியம்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும். முதல்வர் விரைவில் நிதியுதவி அறிவிப்பார்.

சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலின்படி, சிறுமி காணாமல் போன ஒரு மணி நேரத்திற்குள் இந்த கொடூரம் நடைபெற்றுள்ளது. இரவு 8 முதல் 9 மணி நேரத்தில்தான் புகார் அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். சம்பவம் நடைபெற்ற இடத்தை தாம் இன்னும் நேரில் பார்வையிடவில்லை என்றும், காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தற்போது இரண்டு பேரே குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அரசு எந்தவித சமரசமும் செய்யாது என்றும் அமைச்சர் உறுதியளித்தார். குற்றம் நடைபெற்ற பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும்.

மேலும், தமிழகமெங்கும் “சிங்கப்பெண்கள் திட்டம்” விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வரும் 27ஆம் தேதி திட்டம் அமலுக்கு வரும் வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகரிக்கப்படும். ஆர்டிஓ மற்றும் காவல்துறை இணைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.