கோவை மாவட்டம் பேரூர் மாதம்பட்டி பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு பேசினார்.
மணமக்களை வாழ்த்திய அவர், இருவரும் உயர்கல்வி பெற்றவர்கள் எனக் குறிப்பிட்டு, இன்றைய சமூகத்தில் பெண்களுக்கும் கல்வி மற்றும் தொழில் தேர்வு செய்யும் உரிமை கிடைத்திருப்பது பெரிய முன்னேற்றம் என தெரிவித்தார். இந்த நிலை உருவாக தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் நீண்ட காலமாக போராடியதன் விளைவாகும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சமூக ஊடகங்கள் மூலம் பரவும் தகவல்களை மக்கள் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. எந்த தகவலாக இருந்தாலும் அதன் உண்மைத் தன்மையை ஆராயும் பகுத்தறிவு அவசியம் என்று வலியுறுத்தினார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கணினி பயன்பாடுகளும் சில நேரங்களில் தவறான தகவல்களை வழங்கக்கூடும் என்பதால், தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டில் பெண்கள் அமைச்சர்களாக இருந்த வரலாறு இருந்தும், தவறான தகவல்கள் பரப்பப்படுவது குறித்து கவலை தெரிவித்த அவர், தகவல்களின் நம்பகத்தன்மையை சரிபார்ப்பது மிகவும் முக்கியம் என்றார்.
தேர்தல் தோல்வி குறித்து குறிப்பிட்ட அவர், பேரறிஞர் அண்ணா எடுத்துக்காட்டை கூறி, தேர்தல் என்பது மக்களின் தீர்ப்பு; அதை ஏற்றுக்கொள்வதே அரசியல் பண்பு என்றார். இறுதியாக, பகுத்தறிவு மிக்க சமூகத்தை உருவாக்கவும், ஆண்-பெண் சமத்துவத்தை நிலைநிறுத்தவும் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
