இந்தியா போன்ற பன்முகத்தன்மை நிறைந்த நாட்டில், மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்ற கருவி மட்டுமல்ல; அது ஒவ்வொரு சமூகத்தின் கலாச்சாரம், வரலாறு மற்றும் அடையாளத்தையும் பிரதிபலிக்கும் முக்கிய கூறாக பார்க்கப்படுகிறது. பல மொழிகள், பல மரபுகள் இணைந்து வாழும் இந்தியாவில் எந்த மொழி அதிகம் பேசப்படுகிறது என்பது எப்போதும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் கேள்வியாக இருந்து வருகிறது.

சமீபத்திய மொழியியல் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழியாக இந்தி தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 52.83 கோடி பேர் இந்தி மொழியைப் பயன்படுத்துகின்றனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பல வடஇந்திய மாநிலங்களில் இந்தி பரவலாகப் பேசப்படுவதால், முதலிடத்தில் இருப்பது ஆச்சரியம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இப்பட்டியலில் பெங்காலி மொழி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. சுமார் 9.73 கோடி பேர் பேசும் மொழியாக பெங்காலி திகழ்கிறது. மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் இந்த மொழி பரவலாகப் பயன்படுகிறது.

பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில், மராத்தி மூன்றாவது இடத்தில் உள்ளது. சுமார் 8.3 கோடி பேர் பேசும் மராத்தி, மகாராஷ்டிராவின் அதிகாரப்பூர்வ மொழியாக மட்டுமல்லாமல், தனித்துவமான இலக்கிய மரபைக் கொண்ட இந்தியாவின் முக்கிய மொழிகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்திக்கும் மராத்திக்கும் இடையே எழுத்துருவில் ஒற்றுமைகள் இருந்தாலும், மராத்தி தனித்துவமான இலக்கிய வரலாற்றைக் கொண்டுள்ளது.

அதைத் தொடர்ந்து தெலுங்கு நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. சுமார் 8.1 கோடி பேர் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் இந்த மொழி பெரும்பான்மையாகப் பேசப்படுகிறது.

இந்தியாவின் தொன்மையான செம்மொழிகளில் ஒன்றான தமிழ், இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. சுமார் 6.9 கோடி முதல் 7.8 கோடி பேர் வரை தமிழ் பேசுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ், இந்தியாவைத் தாண்டியும் பல நாடுகளில் பரவலாகப் பேசப்படுகிறது.

இதனையடுத்து குஜராத்தி, உருது, கன்னடம், ஒடியா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகள் அடுத்தடுத்த இடங்களில் இடம்பெற்றுள்ளன.