தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், இன்று அதிகாலை சத்ரு சம்ஹார பூஜை செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக உள்ளது. இந்தக் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். குறிப்பாக விடுமுறை மற்றும் திருவிழா காலங்களில் பல்லாயிரக்கணக்காக பக்தர்கள் வருவார்கள்.

இந்நிலையில் இன்று அதிகாலை கோவிலுக்கு விஜய் வருகை குறித்த தகவல் பரவியதும், கோவில் வளாகத்தில் பக்தர்கள், ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. கோவிலுக்குள் நுழைந்த விஜய், முதலில் சிறப்பு பெற்ற சத்ரு சம்ஹார மூர்த்தியை தரிசனம் செய்து, பின்னர் சத்ரு சம்ஹார பூஜையில் கலந்து கொண்டார்.

இந்த பூஜை எதிரிகளை வெல்லவும், தடைகள் மற்றும் தீய சக்திகளை அகற்றவும் நடத்தப்படும் சக்திவாய்ந்த வழிபாடாக கருதப்படுகிறது. அரசியல் மற்றும் தொழில் துறைகளில் இருப்போர் இவ்வழிபாட்டை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.

இதுவரை பல அரசியல் தலைவர்கள் இந்த கோவிலில் சத்ரு சம்ஹார பூஜை நடத்திய நிலையில், விஜய் முதன்முறையாக இந்த பூஜையில் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. பூஜை நிறைவடைந்த பின், அவர் மூலவர் சன்னதியின் முன்பு தரையில் அமர்ந்து தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டார். தொடர்ந்து சண்முகர், வள்ளி, தெய்வானை, தட்சிணாமூர்த்தி, பெருமாள் மற்றும் சூரசம்ஹார மூர்த்தி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளிலும் தரிசனம் செய்தார்.

சத்ரு சம்ஹார பூஜை எதிரிகள், வழக்குத் தொல்லைகள், உடல்நலப் பிரச்சினைகள், கடன் சிக்கல்கள், தொழில் நஷ்டம் மற்றும் செவ்வாய் தோஷம் போன்றவற்றிலிருந்து விடுபட உதவும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.

இந்த நிலையில், விஜய் மேற்கொண்டுள்ள இந்த ஆன்மிக நிகழ்வு அவரது அரசியல் பயணத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு பரவலாக பேசப்படுகிறது. தேர்தல் அரசியலில் ஆன்மிகச் செயல்பாடுகள் அடிக்கடி கவனத்தை ஈர்க்கும் சூழலில், விஜயின் இந்த நடவடிக்கை, அவரது அரசியல் பயணத்திற்கு சாதகமாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.