கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா புதன்கிழமை தேர்தல் பரப்பரை மேற்கொண்டார்.
தடாகம் சாலையில் உள்ள வெங்கடாபுரம் பகுதியில் அவர் தேர்தல் பரப்புரையை துவங்கினார். அவரோடு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ரேகா குப்தா தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வின் போது செய்தியாளர்களை சந்தித்தவர், பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு ஒட்டுமொத்த தேசத்தையும் முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று வருகிறது, தமிழக மக்களும் அதனையே விரும்புகின்றனர் என தெரிவித்தார்.
வானதி சீனிவாசன் ஒரு சிறந்த வேட்பாளர் என்று தெரிவித்த அவர், அவர் மீது மக்கள் வைத்துள்ள அன்பும், ஆசியும் இந்த தோ்தலில் அவருக்குப் பெரும் வெற்றியைத் தேடித் தரும் எனக் கூறினார். வரவிருக்கும் தோ்தலில் தமிழக மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவை வழங்கி, ஆட்சியில் அமர்த்துவர் எனப் பேசினார். முன்னதாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனை, ரேகா குப்தா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தொடர்ந்து நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் வடவள்ளி, பி.என் புதூர் ஆகிய பகுதிகளில் வானதி சீனிவாசனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
