கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், கடந்த சில நாட்களாகத் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், ஏப்ரல் 10 அன்று மதியம், அவரது வலது காலில் ஏற்பட்ட திடீர் வீக்கம் மற்றும் தொற்று காரணமாகக் கோவையிலுள்ள கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவரின் உடல்நிலை குறித்து, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பல முக்கிய அரசியல் கட்சியினர் கேட்டறிந்தனர். தற்போது, வானதி சீனிவாசனை ஆதரித்து, பாஜக, அதிமுக நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவரது இரு மகன்களும் தாய்க்காக பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். மேலும் விரைவாக உடல்நலம் தேறிக் கொண்டிருப்பதாகவும் வீடியோ வெளியிட்டு வானதி பேசியிருந்தார்.

இந்த நிலையில், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, வானதி சீனிவாசனை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மேலும் அவருக்கு ஆதவராக இன்று மாலை பிரச்சாரம் மேற்கொள்கிறார். அவிலா ஸ்கூல் அருகில் வெங்கிடாபுரம், சின்னம்மாள் நகர், கண்ணப்பா நகர் 5வது வீதி, கே கே புதூர், எஸ்பிஐ ரோடு, நாராயணசாமி வீதி ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.