பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில், கடந்த சில நாட்களாக கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

கோடையின் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொகுதி முழுவதும் வீதி வீதியாகச் சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். இதனால் அவருக்குக் காலில் கடுமையான வலியும், வீக்கமும் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

வலியின் தீவிரம் அதிகரித்ததைத் தொடர்ந்து, கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஓய்வின்றி உழைத்ததே இந்த உடல்நலப் பாதிப்பிற்கு முக்கியக் காரணம் என அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த 48 மணி நேரம் அவர் கட்டாயம் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் தேர்தல் களத்திற்குத் திரும்ப வேண்டும் என்று அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.