தொகுதி சார்ந்து அதிமுக வேட்பாளர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் எடுபடாது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியில் வேட்பாளர் நித்தியானந்தன் போட்டியிடுகிறார். பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மேற்கு மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்துகொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியை, கூட்டணி கட்சியைச் சேர்ந்த நித்தியானந்தனை வெற்றி பெற வைப்பதை இலக்காக கொண்டு அனைத்து நிர்வாகிகளும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். அதிமுக ஆட்சியில் பல்வேறு மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.
அப்போது ஏன் மாவட்ட கோரிக்கையை கேட்டு பெறவில்லை. இருக்கும்போது செய்யாமல் வந்தால் செய்வேன் என்பது எப்படி தெரியும்.
இந்த முறை ஆட்சி அமைக்கப் போவதில்லை என்பது தெரியும். எனவே அதிமுக தலைமை எப்படி வாக்குறுதிகள் தருகின்றார்களோ, அதேபோல் அதிமுக வேட்பாளரும் வாக்குறுதி கொடுக்கின்றார். இது மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது.
பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் முதல்வராக தமிழக முதல்வர் திகழ்ந்து வருகிறார். தொகுதி சார்ந்து மாவட்டம் சார்ந்து கொடுக்கின்ற வாக்குறுதிகளை நானோ, வேட்பாளரோ, மாவட்ட செயலாளரும் கொடுக்க இயலாது. கொள்கை ரீதியான வாக்குறுதிகளை தலைமை தான் முடிவு எடுக்க முடியும். நாங்கள் கோரிக்கைகளை பரிசீலனைக்கு எடுத்துச் செல்வோம் என தெரிவித்தார்.
