தேர்தலை முன்னிட்டு கோவை மாநகர அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி, கோவை செல்வபுரம் பகுதியில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதன் ஒரு பகுதியாக, செல்வபுரம் பகுதியில் உள்ள முக்கியப் பிரமுகர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்

மேலும், அங்குள்ள நடிகர் அஜித் குமாரின் ரசிகர் மன்ற நிர்வாகிகளையும், ரசிகர்களையும் நேரடியாகச் சந்தித்துப் அவர்களுடன் நீண்டநேரம் கலந்துரையாடி அவர்களின் ஆதரவுகளை பெற்றார்.

அப்போது அவர் பேசியதாவது; அஜித், ஜெயலலிதா மீது பெரும் மரியாதை கொண்டவர். அடிக்கடி அவரை சந்திப்பார். ஜெயலலிதா மறைந்தபோது வெளிநாட்டில் இருந்து வந்து அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அஜித் மீது எங்களுக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு என்றார்.

 

மேலும், ஆட்சியில் மாற்றம் வேண்டும், சட்டம் ஒழுங்கு சரி செய்யப்படும். நீங்கள் உங்கள் நண்பர்களிடம் சொல்லி, எனக்கு இரட்டை இலை சின்னத்தில் அதிக வாக்குகள் பெற்றுத் தருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனிப்பட்ட முறையில் ரசிகர்களைச் சந்தித்து, வரும் தேர்தல்களுக்கான ஆதரவைத் திரட்டியதாகக் கூறப்படும் இந்த நிகழ்வு, கோவை அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய அளவிலான ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட அஜித் ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்க்க, அவர் மேற்கொண்ட இந்த முயற்சி, மற்ற அரசியல் கட்சிகள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.