பாஜக சார்பில் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் வானதி சீனிவாசன், அவிநாசி சட்டமன்ற தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்த வானதி சீனிவாசன், எல்.முருகனுக்கு பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் வானதி சீனிவாசன் பேசுகையில்: திமுக ஆட்சியில் கொங்கு மண்டலத்தில் உள்ள சிறு, குறு தொழில்கள், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் திமுக ஆட்சியில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
வரும் நாட்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பிரச்சாரம் செய்ய உள்ளனர். மக்களின் ஆதரவோடு இந்த தேர்தலில் பாஜகவின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள்.
அண்ணாமலை போட்டியிடாத காரணத்தை அவரே தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இதனை தெளிவுபடுத்தி உள்ளார். வரும் நாட்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை சிறப்பான முறையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். வேட்பாளர்கள் தேர்வு, தொகுதி முடிவு ஆகியவை கட்சியின் உயர்மட்ட குழு தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில்: கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் பல வேதனைகளை சந்தித்து வருகின்றனர். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்தின் வளர்ச்சி பெரிதும் தடைபட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு டபுள் இன்ஜின் சர்க்காராக உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் தேவை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசோடு திமுக அரசாங்கம் அனுசரணையாக இல்லாததால், தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது என்றார்.
