இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 28வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
இதில் உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம், வாலிபால், கூடைபந்து, கிரிக்கெட், எறிபந்து, கபடி, டேபில் டென்னிஸ், சதுரங்கம், கேரம், இறகுபந்து போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டது. மாணவிகளுக்கான தனிநபர் சாம்பியன் பட்டத்தை ஸ்ரீமதி, மாணவர்களுக்கான தனிநபர் சாம்பியன் பட்டத்தை லிங்கேஸ்வரன் பெற்றனர்.
சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கூடைபந்து பயிற்சியாளர் பிரேம்குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், வெற்றிக் கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கினார்.
மேலும் அவர் பேசுகையில், நிகழ்ச்சிகள் பல இருந்தாலும், விளையாட்டுவிழா என்பது மாணவர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை வழங்கக்கூடிய நிகழ்ச்சி. கல்லூரியில் விளையாட்டுவிழா நிகழ்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

மாணவர்கள் முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். யார் ஒருவர் குறிப்பிட்ட நேரங்களில் முடிவுகளை சரியாக எடுக்க கற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறுவர் என்று பேசினார்.
விழாவில் இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி, நிர்வாக செயலாளர் பிரியா, முதல்வர் பொன்னுசாமி, அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

