அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான பாஜக சார்பில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் யாரெல்லாம் போட்டியிடப் போகிறார்கள் என்பது பற்றிய விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவராமல் உள்ளது.

இந்நிலையில் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பாரத ஜனதா கட்சிக்கு அ.தி.மு.க.வால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் வானதி சீனிவாசன் தான் போட்டியிடுவார் என்று பேச்சுக்கள் அடிபடும் நிலையில், இது பற்றி இன்று செய்தியாளர்கள் வானதியிடம் கேட்டனர்.

அதற்கு அவர், பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் வெளிநாட்டில் இருந்து நாளை காலை இந்தியா வருகிறார். அவர் வந்த பிறகு மாநில அளவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற பின்னர் அந்த பட்டியல் ( கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் யார் போட்டியிடுவார் என்பது பற்றிய பட்டியல்) டெல்லி செல்லும். டெல்லியில் இருந்து எங்கள் வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என்று வானதி செய்தியாளர்களிடம் கூறினார்.

தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக கேரளா செல்ல கோவை வந்த பிரதமர் மோடியை வரவேற்க பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் இன்று கோவை விமான நிலையம் வந்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.

கோவை தெற்கு தொகுதியில் திமுகவின் வேட்பாளராக களம் இறங்கும் செந்தில் பாலாஜியை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

“ஊழல் கரை படிந்த ஒரு வேட்பாளரை கோவை போன்ற இடத்திற்கு அனுப்பி வைத்திருப்பது மூலம் இரண்டு விஷயங்கள் நடக்க வாய்ப்புண்டு -கடந்த முறை போலவே கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும். இரண்டாவது – இது போன்ற ஊழல் கரை படிந்த வேட்பாளரை கோவைக்கு அறிவித்திருப்பதன் மூலம் கோவை மக்களை திமுக அவமரியாதை செய்திருக்கிறது” என்று வானதி விமர்சனம் செய்தார்.

“கோவையில் திமுகவிற்காக எத்தனையோ காலம் பணி செய்து, இந்தப் பகுதியில் கட்சியை வளர்த்த உண்மையான திமுக விசுவாசிகளுக்கெல்லாம் இந்த இடத்தில் சீட்டு வழங்காமல் கோவை திமுக காரர்களை நம்பாமல் மு.க. ஸ்டாலின் இதுபோன்று வெளி மாவட்டத்தில் இருந்து ஒருவரை இங்கு வேட்பாளராக நியமிப்பதன் மூலம் எங்களுடைய வெற்றிக்கு வழி செய்து கொடுத்து இருக்கிறார்,” என வானதி சீனிவாசன் கூறினார்.

இந்த முறையும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் 2021 போலவே 2026 தேர்தல் முடிவுகள் கோவை மாவட்டத்தில் இருக்கும், என வானதி தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.