கோவை மாவட்டம் என்றைக்குமே அதிமுக கோட்டை. இங்கே அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது: தமிழகம் முழுவதும் அதிமுகவின் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடும் சுமுகமாக முடிந்து, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் என்றைக்குமே அதிமுக கோட்டை. இங்கே அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. கடந்த அதிமுக ஆட்சியில், எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது, கோவை மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.
அத்திக்கடவு – அவிநாசி திட்டம், விமான நிலைய விரிவாக்கம், நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் போடப்பட்ட மேம்பாலங்கள் என அனைத்தும் அதிமுகவின் சாதனைகள். ஆனால், திமுக ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளாக இந்த திட்டமும் வரவில்லை. ஏற்கனவே நாங்கள் கொண்டு வந்த திட்டங்களைக் கூட முடிக்காமல் முடக்கி வைத்துள்ளனர். கோவை மாவட்டத்தில் விடுபட்ட திட்டங்களை செயல்படுத்தி மக்கள் எதிர்பார்த்த திட்டங்களை எல்லாம் கண்டிப்பாக கொண்டு வருவோம்.
திமுக அரசு வந்தாலே சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி மக்களை வதைக்கிறார்கள். இதற்கெல்லாம் வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். அதிமுக ஒரு மாபெரும் இயக்கம். கூட்டணியில் ஒரு சில இடங்களில் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் இருப்பது இயற்கைதான், அவை அனைத்தும் விரைவில் சரியாகிவிடும்.
திமுக யாரை நிறுத்தினாலும், கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட கொங்கு மண்டலம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடியார் தலைமையில் பொற்கால ஆட்சியை அமைக்கும் என தெரிவித்தார்.
