கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் +2 வகுப்பு படித்துவருபவர் நந்தகுமார் (17). கவுண்டம்பாளையத்தை சேர்ந்த இவர், பள்ளியின் விடுதியில் தங்கி பயின்று வருகிறார்.

தற்போது நிலவி வரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு சூழலில், விடுதியில் ஏற்பட்ட சமையல் எரிவாயு குறைவு காரணமாக மார்ச் 19 அன்று சமையலுக்கு விறகை எடுக்க மாணவர்களுக்கு விடுதி காப்பாளர் ராஜ்குமார் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த மரம் ஒன்றில் ஏறி காய்ந்த கிளைகளை பறிக்க ராஜ்குமார் மாணவன் நந்தகுமாருக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

மரம் ஏறிய மாணவன் துரதிஷ்டவசமாக கீழே விழுந்ததில் முதுகெலும்பில் பலத்த காயம் அடைந்து உள்ளார். இதை அடுத்து மாணவன் ஜோதிபுரம் பகுதியில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் அங்க அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறுவனின் தாயார் கொடுத்த புகாரை வைத்து பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் விடுதி காப்பாளர் ராஜ்குமார் மீது வழக்கு பதிந்துள்ளனர். மாணவனின் முதுகெலும்பு பாதிக்கப்பட்டுள்ளதால் அடுத்த 6 மாதங்களுக்கு அவரால் நிற்கவோ உட்காரவோ முடியாது என அவரின் தாயார் கூறியுள்ளார். மேலும் தனது மகன் மரம் ஏற சோர்வாக உள்ளது என கூறியும் கேட்காமல் காப்பாளர் அவரை கட்டாயப்படுத்தி மரம் ஏற வைத்துள்ளார் என குற்றம்சாட்டினார். இந்த விஷயத்தில் பள்ளி நிர்வாகம் மேலும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அவர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.