கோவையில் சாலையில் கிடந்த பணப்பையை எடுத்து, அதனை உரியவரிடம் நேர்மையுடன் ஒப்படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த மணீஷ் (45) அவர்களின் மகள் ஜான்வி (9), புலியகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மதியம், ஜான்வி தனது தந்தையுடன் வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அவர்கள் தேர்வீதி அருகே சென்றபோது, சாலையில் ஒரு பணப்பை கிடந்தது.

அதை எடுத்துப் பார்த்த ஜான்வி, அதன் உள்ளே ரூ.9,500 பணம், ஏடிஎம் கார்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவை இருப்பதை கண்டார். உடனே தனது தந்தையுடன் கடைவீதி காவல் நிலையத்திற்கு சென்று, அந்த பணப்பையை இன்ஸ்பெக்டர் சங்கரிடம் ஒப்படைத்தார்.

பின்னர் காவல்துறையினர், ஆதார் அட்டையில் இருந்த முகவரியின் அடிப்படையில் பணப்பையின் உரிமையாளரை கண்டறிந்தனர். விசாரணையில், அந்த பணப்பை பாப்பநாயக்கன்புதூரை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர் ஹரீஸ் (33) என்பவருடையது என்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஹரீஸை காவல் நிலையத்திற்கு அழைத்து, மாணவி ஜான்வி அவரிடம் பணப்பையை ஒப்படைத்தார். மாணவியின் நேர்மையான செயலை பாராட்டி, இன்ஸ்பெக்டர் சங்கர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.