Allow people to carry up to Rs. 2 lakh – TACT organization requests Election Commission
2026 சட்டமன்ற பொது தேர்தல் தமிழ் நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு 15.3.2026 அன்று வெளியானது. இதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி மார்ச் 15ம் தேதி முதல் தேர்தல் காலம் முழுவதும் வெளியே செல்பவர்கள் ரூ.50,000க்கு மேற்பட்ட பணத்தை எடுத்துச்செல்லும்போது அதற்கு உரிய ஆவணத்தை கையில் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் பறக்கும் படையினர் சோதனை மேற்கொள்ளும் போது அவை பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இக்காலகட்டத்தில் குறைந்த பட்சம் ரூ. 2 லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதிக்கவேண்டும் என தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டாக்ட் அமைப்பு) தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு கடிதம் எழுதி உள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் எழுதிய கடிதத்தில் கூறியதாவது :-
தமிழகத்தில் குறுந்தொழில் முனைவோர்களும், குறு சிறு வியாபாரிகளும், சிறு ஓட்டல்கள் நடத்துபவர்களும், குறு விவசாயிகளும், தங்களின் பயன்பாட்டுக்கான மூலப்பொருள்களும், நீர் மோட்டர் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பொருள்களை வாங்குவதற்கும், தாங்கள் சேமித்து வைத்து உள்ள பணத்தின் மூலம் தங்களுக்கு தேவைகளுக்கான கொள்முதல் செய்து வருவது நடைமுறையில் உள்ளது.
இந்த சூழ்நிலையில் தான், தேர்தல் நடைமுறையில் பணம் கொண்டு செல்வதற்கான அனுமதி ரூ.50,000க்கு மட்டும் வழங்கி உள்ளதால், மேற்கண்ட தொழில்களும், வியாபாரங்களும், குறு விவசாயிகளும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர்.
எதிரபாராத விபத்துக்கள் ஏற்படுகனின்ற போது ஆஸ்பத்திரி செலவினங்களுக்காக தங்கள் வீட்டில் சேமிப்பில் உள்ள பணம் எடுத்து செல்லும் போது அதிகாரிகளின் கெடுபிடியால் அனைத்து விதத்திலும் அனைவரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.
அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கின்றன. நடைமுறையில் உள்ள சிக்கலை தீர்ப்பதற்கும் குறுந்தொழில்கள் சிறு வியாபாரிகள் ஓட்டல்கள் நடத்துவதற்கும், குறு விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்ப கொள்முதல் செய்தவதற்கும், தனி மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கும் குறைந்த பட்சம் தேர்தல் நடைமுறையில் உள்ள இந்த காலகட்டத்தில் குறைந்த பட்சம் ரூ. 2 லட்சம் வரை எடுத்து செல்ல தேர்தல் ஆணையம் உரிய முறையில் அவசரமாக பரிசீலித்து அனுமதி கொடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த கோரிக்கையை நிறைவேற்றி தந்து தமிழகத்தின் குறுந்தொழில்கள், சிறு வியாபாரிகள், சிறு ஓட்டல் நடத்தபவர்கள், சிறு விவசாயிகள் நலன்களை காத்திட அனைவரின் சார்பில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
