கோவை இருகூர் பகுதியில் நிறைவுபெற்ற சாலை பணிக்கு அரசு தரப்பில் ஒப்பந்ததாரருக்கு செலுத்த வேண்டிய கட்டணம் வழங்கப்படாததாக கூறப்படுகிறது.
இதனால் சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு அந்த வழி மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அடுத்து கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், அரசு தரப்பில் ஒப்பந்ததாரருக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை உடனே செலுத்தி சாலையை பயன்படுத்தக் கூடிய வகையில் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:-
கோவை இருகூர் பேரூராட்சியில் சாலைப் பணிகளை முடித்துக் கொடுத்தும் ஒப்பந்தகாரருக்கு இன்னும் முறையாக பணம் கொடுக்காததால் சாலையின் நடுவே மண்ணைக் கொட்டி பொதுமக்கள் செல்ல முடியாதபடி தடுப்பை ஏற்படுத்தி வைத்திருப்பது அரசு எந்திரம் எப்படி செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
ஏற்கனவே மக்கள் வரிப்பணத்தில் தரமற்ற முறையில் பெயர்ந்து விழும் கட்டிடங்களையும், ஒரிரு மழைக்கே தாங்காத சாலைப் பணிகளையும் அமைத்து ஏதோ பேட்ச் ஒர்க் போன்று தான் அடிப்படை வசதிகளையே பெயருக்குச் செய்து கொடுத்து வருகிறது அரசு.
இந்நிலையில் தெருக்களில் மேற்கொள்ளப்பட்ட சாலை பணிகளை முடித்துக் கொடுத்த ஒப்பந்தகாரர்களுக்கு சரிவர பணத்தை கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்ததன் விளைவு தற்போது பொதுமக்களை வாட்டி வதைக்கிறது.
ரியல் எஸ்டேட், மணல், கனிம வள மாபியாக்களுக்கு மட்டும் கோடிகளில் டெண்டர்களை விட்டு துரிதமாக பணிகளை மேற்கொள்ளும் அரசு பொதுமக்களுக்கான அடிப்படை வசதி பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தகாரர்களை அலைக்கழிப்பது கண்டிக்கத்தக்கது.
விரைவில் உரியமுறையில் ஒப்பந்தகாரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்தி அடிப்படை வசதிகள் தங்கு தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
