கோடை காலத்தில் வெப்ப தாக்கத்திலிருந்து பாதுகாக்க பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
செய்ய வேண்டியவை
வெயில் நேரங்களில் வெளியே செல்ல நேர்ந்தால் தொப்பி அணிந்து அல்லது குடை பிடித்து செல்லவும். வெயில் நேரங்களில் வெளியே செல்லும்போது காலணி அணிந்து செல்ல வேண்டும். வெயிலில் செல்ல நேர்ந்தால் வெளிர்ந்த நிறமுடைய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
வெளியில் செல்லும்போது தண்ணீர் பாட்டிலை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். தாகம் எடுக்காவிட்டாலும் கூட அடிக்கடி தண்ணீர், இளநீர், மோர் போன்ற பானங்களை அருந்த வேண்டும். நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, முலாம் பழம், ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி பழங்கள் மற்றும் வெள்ளரி போன்றவற்றை உட்கொள்ளலாம்.
எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். வெயில் நேரங்களில் காற்றோட்டம் நிறைந்த மற்றும் குளிர்ச்சியான இடங்களில் இருக்க வேண்டும். வீட்டின் ஜன்னல்களை திறந்து காற்றோட்டமாக வைக்க வேண்டும். மின்விசிறி அல்லது ஏர் கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும்.
வெயில் நேரங்களில் கதவு மற்றும் ஜன்னல்களை திரைச்சீலைகளை கொண்டு மூடி வைக்க வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள், முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தொழிலாளர்கள் நிழலான இடங்களில் வேலை செய்ய வேண்டும். வேலை செய்யும் இடங்களில் தற்காலிக கூடாரங்களை உருவாக்குவதன் மூலம் வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
கடினமான மற்றும் திறந்த வெளியில் செய்யும் வேலைகளை வெயில் குறைவாக உள்ள காலை மற்றும் மாலை வேளைகளில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். கடினமான வேலைகளை செய்பவர்கள் அடிக்கடி சிறு சிறு ஓய்வு எடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து மக்கள் கூடும் இடங்களிலும் பாதுகாப்பான குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தலைவலி, மயக்கம், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்/ அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்யக் கூடாதவை
காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெய்யிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். தேநீர், காபி, மது மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். இவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும்.
வெயில் நேரங்களில் திறந்த வெளியில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். வெயில் நேரத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும். வெயிலில் குழந்தைகளை வாகனங்களில் தனியாக விட்டுச் செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கதவு அடைக்கப்பட்ட வாகனங்களில் வெப்பநிலை அபாயகரமான நிலையில் உயரக்கூடும்.
