கோவை மாநகர காவல் துறையின் நுண்ணறிவுப்பிரிவில் பணிபுரிந்தவர் கனகராஜ். இவர் மதுரையை சேர்ந்தவர், முன்னாள் ராணுவ வீரராகவும் இருந்துள்ளார்.
2017ம் ஆண்டில் பணியில் சேர்ந்த இவர்,
கடந்த 2026 ஜனவரி 28ஆம் தேதி, மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
அவரின் மனைவி, பெற்றோர் மற்றும் 2 பெண் குழந்தைகளுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு காவல்துறை 2017 பேட்ச் காக்கும் உறவுகள் என்ற வாட்ஸ் ஆப் குழுவின் மூலம் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருக்கக் கூடிய 6954 காவலர்கள், நிதி திரட்டி அதை அவர் குடும்பத்தினர் பெறும்படி அனுப்பி வைத்துள்ளனர்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ரூ.22,55,500 தொகையை அவர்களின் குடும்ப நல உதவிக்காக கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் மூலம் வியாழன் அன்று வழங்கப்பட்டது.
இதில் ரூ. 16 லட்சம் கனகராஜின் 2 மகள்களுக்கும், ரூ. 3 லட்சம் அவரின் மனைவிக்கும், ரூ. 3 லட்சம் அவரின் பெற்றோருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரொக்கமாக ரூ.55,000மும் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை 2017 பேட்ச் காக்கும் உறவுகள் வாட்ஸ்அப் குழு என்பது தமிழக காவல்துறையில் 2017ஆம் ஆண்டு சேர்ந்த 6000+ காவலர்களை கொண்டது எனவும்,
இந்தக் குழு மூலம் இதற்கு முன்பு இதுபோல 26 முறை மறைந்த சக காவலர்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது என்பதும் தெரிய வருகிறது.
