சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து, பெண்களை வேளாண் தொழில்முனைவோராக ஊக்குவிக்கும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ எனும் கருத்தரங்கை வரும் மார்ச் 8-ம் தேதி அரசூரில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் நடத்த உள்ளது.

இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இதில் கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் இந்திரா, சில் அண்ட் ஹில் ஐஸ்கிரீம் நிறுவனர் லதா ராஜா மற்றும் “மண் காப்போம்” திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா ஆகியோர் பங்கேற்றனர்.

சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களும் தொழில்முனைவோராக ஊக்குவித்து வழிகாட்டும் வகையில் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ எனும் கருத்தரங்கு அரசூரில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வரும் மார்ச் 8-ஆம் தேதி நடைபெறுகிறது.

உணவு, மருத்துவம், இயற்கை விவசாயம் மற்றும் மதிப்புக்கூட்டல் ஆகிய துறைகளில் சாதனைப் படைத்த பெண் தொழில்முனைவோர்கள் ஒன்றிணைந்து வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டக் கூடிய வணிக யுக்திகள் குறித்து வழிகாட்டும் வகையில் இந்த கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 2,000 பெண்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

நிகழ்வில் பெரியகுளம் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி வசந்தன் செல்வம், புதிய தொழில் முனைவோருக்கு அரசு நிதித் திட்டங்கள், கடன்கள் மற்றும் சலுகைகள் குறித்து வழிகாட்ட உள்ளார்.

ராஜிஸ் கிச்சன் நிறுவனர் ராஜாத்தி கண்ணன், மசாலா பொருட்கள் மூலம் மாதம் ரூ.15 லட்சம் வருவாய் ஈட்டும் ரகசியங்களை விளக்கிக் கூற உள்ளார். கொற்றவை நிறுவனர் காருண்யா குணவதி, தேங்காய் சிரட்டை கைவினைப்பொருட்கள் குறித்தும் கிராமப்புற பெண்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் சமூகத் தொழில்முனைவு குறித்தும் விவரிக்க உள்ளார்.

அதே போன்று பைரவி ஆர்கானிக்ஸ் ஷியாமளா குணசேகரன், ஐந்தடுக்கு பயிர் முறை மூலம் லாபம் ஈட்டுவது குறித்தும் அருவித்தா ஆர்கானிக்ஸ் ஆர்த்தி செல்வகுமார், ஆன்லைன் சந்தைப்படுத்தல் குறித்தும் ஆரோக்கியமான ஐஸ்கிரீம் தயாரிப்பு குறித்து சில் அண்ட் ஹில் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் லதா விளக்க இருக்கிறார்.

இதனுடன் சாமு மைக்ரோகிரீன்ஸ் சாமுண்டீஸ்வரி, மைக்ரோகிரீன்ஸ் வணிகம் குறித்தும் மிராக்கிள் லைஃப் ட்ரீ சயின்ஸ் நிறுவனர்கள் சுஜாதா மற்றும் குமரன், முருங்கை ஏற்றுமதி மூலம் ரூ.5 கோடி வருவாய் ஈட்டுவது குறித்தும் விளக்கிக் கூற உள்ளனர்.

மேலும் லண்டனில் பணியாற்றிய அனுபவம் கொண்ட டாக்டர். ரம்யா ஞானசம்பந்தம், “நஞ்சில்லா உணவே சிறந்த மருந்து” என்ற தலைப்பில் ஆரோக்கியமான வாழ்வியல் குறித்து உரையாற்ற உள்ளார்.

நிகழ்ச்சியில் தமிழகத்தில் மதிப்புக்கூட்டல் பொருட்களை தயாரிப்பதில் சிறந்து விளங்கும் 6 சிறந்த பெண் தொழில் முனைவோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.

வேளாண் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், நவீன பேக்கேஜிங் இயந்திரங்கள் மற்றும் வேளாண் கருவிகளின் விற்பனை மற்றும் கண்காட்சியும் நடைபெற உள்ளது.

இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம். கலந்து கொள்ள விரும்புவோர் பின்வரும் லிங்கில் https://forms.gle/u5323rzZjqJQ8GBd7 பதிவு செய்து கொள்ளலாம், மேலும் தகவல்களுக்கு 83000 93777, 94425 90077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். எனக் கூறினார்.