சிறுதுளி சார்பில் கோவை அன்னூர் தாலுகாவில், இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட பெரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் 17,500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

சிறுதுளி அமைப்பு, ஜே.எஸ்.ஆட்டோகேஸ்ட் ஃபவுண்ட்ரி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிதி உதவியுடன் 10,000 மரக்கன்றுகளை ‘பெரியம்மன் கோவில் வனம்’ என்ற திட்டத்திலும், புல் மெஷின்ஸ் பிரைவேட் லிமிடெட் நிதி உதவியுடன் 7500 மரக்கன்றுகளை ‘கே.பி.கே. வனம்’ என்ற திட்டத்திலும் நடவு செய்துள்ளது.

நிகழ்வில், முதன்மை விருந்தினராக கூடுதல் மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே மற்றும் சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் உஷா நந்தினி கலந்துகொண்டு திட்டங்களைத் தொடங்கி வைத்தனர்.

மேலும் ஜே.எஸ் ஆட்டோகேஸ்ட் ஃபவுண்ட்ரி இந்தியா துணை பொது மேலாளர் (நிதி துறை) ஷ்ரவன் சேனாபதி, புல் மெஷின்ஸ் நிர்வாக இயக்குனர் பார்த்திபன், சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நவ பாரத் இன்டர்நேஷனல் பள்ளியின் மாணவர்கள், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பெண்கள்) மற்றும் எஸ்.என். எஸ். தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து (மேலாண்மை ஆய்வுகள் துறை) மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இத்திட்டங்களுடன் சேர்த்து, சிறுதுளி அமைப்பு மொத்தமாக 10,00,000 மரங்களை கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 200 இடங்களில் நடவு செய்து பராமரித்து வருகிறது.