கோவையில் வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம், வரும் 23 முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி கூறுகையில்: வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் வறண்ட விழித்திரை, விழிவெண் திரையில் முக்கோண வடிவத்தில் வெண்ணிறம் ஆக தடித்தல் மற்றும் மாலைக்கண் நோய் போன்றவைகள் ஏற்படும்.
இதனைக் கருத்தில் கொண்டு தேசிய அளவில் வருடம் இருமுறை வைட்டமின் ஏ திரவம், நாடு முழுவதும் உள்ள 6 மாதம் முதல் 5 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு முகமானது வரும் 23 முதல் 28ம் தேதி வரை (புதன் தவிர்த்து) கோவை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதர நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் கோவை மாவட்டத்தில் உள்ள 2.66 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
