தேசிய நெடுஞ்சாலை – என். ஹெச். 81, திருச்சி சாலை வழியே அமைந்துள்ள சிங்காநல்லூர் சாலை பகுதியில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்க சுமார் 2.4 கிலோமீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் கட்டப்படவுள்ளது.
பல ஆண்டுகளாக சில காரணங்களால் இழுபறியில் இருந்த இந்த திட்டம் தொடர்பான பணி சென்ற ஆண்டு இறுதியில் முன்னேற்றம் கண்டது. இந்நிலையில் இந்த பணிக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், வரும் பிப்ரவரி இறுதியில் டெண்டர்கள் திறக்கப்பட்டு இறுதிசெய்யபட உள்ளது எனவும் தகவல் வெளிவந்துள்ளது.
சிங்காநல்லூர் பகுதியில் 2.4 கிலோமீட்டர் நீளத்திற்கு உழவர் சந்தை முதல் ஜெய் சாந்தி தியேட்டர் வரை 4 வழி சாலைகள் கொண்ட மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை பிரிவு திட்டமிட்டது. முதலில் ரூ.110.8 கோடி மதிப்பில் கட்ட திட்டமிடப்பட்டது. திட்டத்திற்கான மதிப்பீடு என்பது குறைவாக இருப்பதாகவும், கட்டுமான பொருட்கள் விலை நாளுக்கு நாள் உயரும் என்பதால் மதிப்பீடு ரூ. 160 கோடிக்கு மேல் உயர்த்தப்பட வேண்டும் எனவும் கட்டுமான நிறுவனங்கள் அரசை கேட்டுக்கொண்டன.
இது தேசிய நெடுஞ்சாலை கட்டுபாட்டில் இருக்கும் சாலை என்பதால் மதிப்பீடு திருத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டாலும், அதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நிர்வாக அனுமதி கொடுத்தால் தான் அடுத்த கட்ட பணிகள் நடைபெறும். அதன் பின்னர் ரூ.141 கோடிக்கு திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டது.
அதே நேரத்தில் திருச்சி சாலை வழியே மெட்ரோ ரயில் திட்டம் முன்னர் வருவதாக இருந்ததால் இந்த திட்டம் நடைபெறுமா என்ற கேள்வி எழும்பியது. ஒருவழியாக கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம் அவிநாசி சாலை மற்றும் சத்தி சாலைகளில் தான் நடைபெற உள்ளது என்பதால், இங்கு மேம்பாலம் கட்ட சவால் இருக்காது என்ற நிலை உருவானது. (இப்போது கோவை மெட்ரோ ரயில் திட்டம் ரத்தாகி உள்ளது).
கடைசியாக சென்ற ஆண்டு, ரூ.170.82 கோடியாக சிங்காநல்லூர் மேம்பால திட்டத்திற்கான மதிப்பீடு நெடுஞ்சாலை துறையால் உயர்த்தப்பட்டு அதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறைகளில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தற்போது வெளி வந்திருக்கக்கூடிய தகவல்கள் படி இந்த மேம்பால திட்டத்திற்கான டெண்டர்கள் வரவேற்கப்படுகிறது எனவும், பிப்ரவரி 27ஆம் தேதி அவை திறக்கப்படும் எனவும் டெண்டர் இறுதியான பின்னர் பணிகள் துவங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிய வருகிறது.
