கோவை மேற்கு புறவழி சாலை அருகே இன்று ஆட்டோ – மினி டெம்போ விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர், 1 கல்லூரி மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 10 – 10:30 மணிக்குள் மேற்கு புறவழி சாலை வழியே அமைந்துள்ள அறிவொளி நகர் பகுதியில் இருந்து வந்த ஆட்டோ ஒன்றும், அதை ஒட்டி வந்த மினி டெம்போ ஒன்றும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த ஒரு கல்லூரி மாணவி தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். இது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடிக்கடி அங்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறும் அப்பகுதியை சேர்ந்த மக்கள், இனி அங்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என சாலையில் போராட்டம் நடத்தினர்.

இது பற்றி அறிந்த சிலரிடம் பேசுகையில், அறிவொளி நகர் சற்று மேடான பகுதியில் உள்ளது. அங்கிருந்து கீழே இறங்கும் போது பைபாஸ் சாலை இணைகிறது. மேலே இருந்து கீழே வருகையில் வேகத்தடை ஒன்றுள்ளது. எனவே வழக்கமாக அங்கிருந்து வருகையில் வண்டி மெதுவாக தான் வரும்.

இன்று காலை அறிவொளி நகரில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று கீழே வந்து பைபாஸை பிடிக்க முயன்றது. அப்போது மாதம்பட்டியில் இருந்து வேகமாக வந்ததாக சொல்லப்படும் மினி டெம்போ, ஆட்டோ உடன் மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஆட்டோவில் பயணித்த கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

இந்த இடத்தில் இதுபோன்ற விபத்து சம்பவம் நடைபெறாத வகையில் அரசு அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தீர்வு வழங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியில் பாலம் அமைக்கப்பட்டால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என அப்பகுதியினர் கருத்து தெரிவித்தனர்.