இந்தியாவில் உடல் பருமன் ஒரு அச்சுறுத்தலாக மாறி வருவதாக புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து 2023ஆம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பின் படி, நாட்டில் 25.4 கோடி மக்கள் பொதுவான உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

மருத்துவர்கள் கூறுவதாவது, உடல் பருமன் என்பது வெறும் உணவுப் பழக்கம் அல்லது உடற்பயிற்சி இல்லாமை காரணமாக உருவாகும் சாதாரண பிரச்சனை அல்ல. இது நீண்டகாலம் தொடரக்கூடிய, மீண்டும் மீண்டும் ஏற்படும் ஒரு நோயாகக் கருதி சிகிச்சையும், கண்காணிப்பும் தேவைப்படும் நிலை என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்தியாவில், உடல் பருமன் என்பது தற்போது தனிநபர் வாழ்க்கைமுறை சிக்கலைத் தாண்டி, ஒரு தீவிரமான தேசிய சுகாதார பிரச்சனையாக மாறியுள்ளது. கிளினிக்கல் ஒபிசிட்டி இதழில் வெளியான ஆய்வின் படி, ஆய்வில் பங்கேற்றவர்களில் 84 சதவீதம் பேர் எடையைக் குறைக்க முயற்சி செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களில் வெறும் 4.7 சதவீதம் பேர் மட்டுமே தங்களது இலக்கை அடைந்து, அதை ஓராண்டுக்கும் மேலாகத் தக்க வைத்திருக்க முடிந்துள்ளது.

தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 25.4 கோடி பேர் பொதுவான உடல் பருமனுடன் வாழ்கின்றனர். அதே நேரத்தில், 35.1 கோடி பேர் வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பு சேரும் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே இந்தப் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

2019ஆம் ஆண்டில் மட்டும் தொற்றாத நோய்களால் ஏற்பட்ட 5.79 லட்சம் உயிரிழப்புகளில், உடல் பருமன் தொடர்பான உடல்நல சிக்கல்களும் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.