தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் கட்சிகள் வந்து இணைய உள்ளதாகவும், கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் ஒரு மாதத்தில் ஆலோசனை துவங்கப்படும் எனவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற மோடி முகாம் நிகழ்ச்சியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஆகியோர் பார்வையிட்டு துவக்கி வைத்தனர். இதில் மத்திய அரசின் ஆயுஷ் காப்பீடு திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகியவற்றுக்கு பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: தமிழக முதல்வருக்கு எதிரான அதிருப்தி மனநிலை மக்கள் மத்தியில் இல்லை என்ற கருத்தை ஏற்க முடியாது. முதலமைச்சருக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு ஊழியர்கள் என பலரும் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு திமுக அளித்த வாக்குறுதிகளில், 470 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் கட்சிகள் வந்து இணைய உள்ளது. கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் ஒரு மாதத்தில் ஆலோசனை துவங்கப்படும்.
ஊடகங்கள் மீதான தாக்குதல்களுக்கு ஊடகத்தினர் வலுவான கண்டனங்களை தெரிவிக்க வேண்டும். முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், எனக்குமான உறவு அண்ணன் தம்பி உறவு. ஊடகங்கள் எதையும் பெரிதாக்க வேண்டாம்.
பொதுக்கூட்டங்கள் நடத்துவது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்த கேள்விக்கு, திமுக அரசு நீதிமன்றங்களின் வழிகாட்டுதல்களை எல்லா விஷயங்களிலும் பின்பற்றுவதில்லை. ஆனால் எதிர்க்கட்சியினரின் குரலை நெரிக்கும் வகையில் இந்த விஷயத்தில் செயல்படுகிறது என விமர்சித்தார்.
