பிப்ரவரி 14ம் தேதி வேலண்டைன் தினம் எனவும் காதலர்கள் தினம் எனவும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
கி.பி. 3ம் நூற்றாண்டில் வாழ்ந்த வேலண்டைன் எனும் பாதிரியார் நினைவாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அந்த காலத்தில் ரோம அரசர் கிளாடியஸ் தனது போர் படைக்கு திருமணம் ஆகாத ஆண்களை அதிக அளவில் நியமனம் செய்து வந்தார். திருமணம் ஆனவர்கள் படைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டார்கள்.
ராணுவ பணியில் பல இளைஞர்கள் இறந்துவந்தனர். அப்போது பல இளைஞர்கள் அவர்கள் விரும்பும் பெண்களை திருமணம் செய்ய வேலண்டைன் உதவியிருக்கிறார் என கூறுவர். இதனால் இவர் நினைவாக இந்த தினம் காதலர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது என ஒரு கதை உள்ளது.
அதை விடுங்கள்…
நமது நாட்டில் பிப்-14ம் தேதி எப்படி கொண்டாடப்படுகிறது என்பது நமக்கு தெரியும். ஆனால் உலகின் பிற நாடுகளில் இந்த நாள் சற்று வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஜப்பான் நாட்டில் பிப் -14ம் தேதி அன்று பெண்கள் தாங்கள் விரும்பும் ஆண்களுக்கு இனிப்புகள் கொடுப்பார்கள். அதற்கு பதிலாக மார்ச் 14ம் தேதி ஆண்கள் அவர்களுக்கு இனிப்புடன் விலையுயர்ந்த பரிசுகளை கொடுப்பது வழக்கமாக கடைபிடிக்கப்படுகிறது.
தென் கொரியாவில் ஜப்பானில் நடப்பது போலவே வேலண்டைன் தினம் கொண்டாடப்படும். பிப் -14ம் தேதி மற்றும் மார்ச் 14ம் தேதி ஜோடிகள் இனிப்பை கொடுத்துக்கொண்ட பின்னர், ஏப்ரல் 14ம் தேதி ‘ கருப்பு தினம்’ அனுசரிக்கப்படும். இந்த நாளில் ‘சிங்கிள்’- ளாகவே இருப்பவர்கள் அதை சோகம் கலந்து கொண்டாடும் படி கருப்பு உடைகள் அணிந்து, குழுக்களாக சென்று நூடுல்ஸ் மற்றும் கருப்பு சாஸ் உண்பது இயல்பாம்.
ஜெர்மனியில் பிப்-14 அன்று பன்றிகளின் உருவம்/வடிவம் கொண்ட பரிசுகள், மிட்டாய்கள், கண்ணாடியால் ஆன பொம்மைகளை காதல் ஜோடிகள் பரிமாறிக்கொள்ளவது வழக்கம். அந்த நாட்டில் பன்றிகளை போன்ற உருவம் கொண்ட பொருட்கள் அதிர்ஷ்டம் மற்றும் அன்பை கொண்டுவந்து சேர்க்கும் என நம்புகின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் பிப்-14 அன்று அரசு அமைப்புகளே திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். சென்ற ஆண்டு மட்டும் பிலிப்பைன்ஸ் நாட்டின் க்யுசான் நகரில் 280 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் செய்து வைக்கப்பட்டது.
ஆனால் இவர்களை விட பின்லாண்ட் நாடு வேறுபடுகிறது. அங்கு பிப்-14 என்பது நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காதலர்கள் மட்டுமல்ல, நண்பர்கள், குடும்பங்கள், அருகே வசிப்பவர்கள், உடன் பணிசெய்பவர்கள் என அனைவர்க்கும் பூக்கள், நினைவு பரிசுகள் மற்றும் இனிப்புகள் கொடுப்பது வழக்கம்.
ஒரு உலகம், பல உணர்வுகள் … அன்பை மட்டும் விதைப்போம்.
