அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோவை மெட்ரோ ரயில் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என கோவையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த மோப்பிரிபாளையத்தில் அதிமுக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோவை மெட்ரோ ரயில் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது முதல், தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் 6 மருத்துவக் கல்லூரிகளைப் பெற்றுத் தந்தது வரை அனைத்தும் எடப்பாடியார் அரசின் சாதனைகள். கோவையில் இன்று கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது, கத்தி கலாச்சாரம் அதிகரித்து மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதிமுக ஆட்சியில் சிறந்த காவல்துறை நிர்வாகத்திற்காக மத்திய அரசின் விருதுகளைப் பெற்ற கோவை, இன்று சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் தவிக்கிறது.

விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இன்னும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இது குறித்துப் பொது மேடையில் விவாதிக்க திமுக தயாரா என கேள்வி எழுப்பினார்.