தமிழ்நாட்டில் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவுகளில் பரோட்டாவுக்கு தனி இடம் உண்டு. குறிப்பாக இரவு நேரங்களில் பரோட்டா சாப்பிடும் பழக்கம் பலரிடமும் வழக்கமாகிவிட்டது. ஆனால் முழுக்க முழுக்க மைதாவால் தயாரிக்கப்படும் இந்த உணவு, உடல்நலத்திற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
சமீபத்திய ஆய்வுகள் தெரிவிப்பதாவது, மைதாவால் செய்யப்பட்ட உணவுகள் செரிமானமாக அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் குடலுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், குறிப்பாக இரவு நேரங்களில் பரோட்டா போன்ற மைதா உணவுகளை உட்கொள்ளும்போது செரிமானக் கோளாறுகள் தவிர்க்க முடியாததாகின்றன.
இந்த செரிமான சிக்கல்கள் நீண்ட காலம் தொடரும் போது பெருங்குடல் கடுமையாக பாதிக்கப்படலாம். இதுவே காலப்போக்கில் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கக் கூடியதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அண்மைக் காலங்களில் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதற்கும் உணவுப் பழக்க மாற்றங்களே முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன.
புற்றுநோய் பாதிப்புகள் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் 1,00,097 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டில் 53,022 ஆக இருந்த இந்த எண்ணிக்கை, தற்போது இரட்டிப்பாக உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களில் மார்பக புற்றுநோய், கருப்பை வாய், கர்ப்பப்பை மற்றும் கருமுட்டை புற்றுநோய்கள் அதிகமாக காணப்படுகின்றன. அதே நேரத்தில் ஆண்களில் நுரையீரல், இரைப்பை, வாய்ப் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
எளிதில் செரிமானமடையும் உணவுகளை உட்கொள்ளும் போது உடலுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படுவதில்லை. ஆனால் துரித உணவுகள், மைதா சார்ந்த உணவுகள் மற்றும் நார்ச்சத்து குறைந்த உணவுகள் செரிமான அமைப்பை பாதித்து பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கின்றன என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே இரவு நேரங்களில் பரோட்டா சாப்பிடுவதால் தூக்கமின்மை, அசிடிட்டி, செரிமான கோளாறுகள் மற்றும் உடல் எடை மாற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் பெருங்குடல் புற்றுநோய் அபாயமும் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினர் பரோட்டா, பீட்சா போன்ற மைதா உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால், பெருங்குடல் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களுக்கு ஆளாகும் அபாயம் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, மைதாவில் தயாரிக்கப்படும் உணவுகளை அளவோடு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், இயற்கை உணவுப் பழக்கத்திற்கு திரும்ப வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
