ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் போராடும் அங்கன்வாடி  ஊழியர்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் நூற்றுக்கணக்கான பேர் போராடி வருகின்றனர். இன்றும் 7ம் நாளாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சென்ற தேர்தலுக்கு முன்பு தங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றவேண்டும் என்பதை வலியுறுத்தியும், தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டியும் அவர்கள் போராடி வருகின்றனர்.

ANGANwadi protest scaled

இந்த நிலையில், இன்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்களை முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பின்னர், அவர் தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடும்போது,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூலம் இது பற்றி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் எனவும் கடந்த தேர்தலின் போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என கேள்வி எழுப்பப்படும் எனவும் கூறினார்.