கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வ.உ.சி. மைதானத்தை சுற்றியுள்ள பகுதியில் செம்மொழிப் பூங்கா, வ.உ.சி. விளையாட்டு மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், ஸ்கேட்டிங் பயிற்சி பள்ளி, உடற்பயிற்சி கூடம், கால்பந்து மற்றும் கூடைப்பந்து மைதானங்கள், சிறுவர்கள் விளையாடும் இடம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அம்சங்கள் ஏற்கனவே அமைந்துள்ளன. இத்தகைய வசதிகள் நிறைந்துள்ள இந்தப் பகுதியில், நீச்சல் குளம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி, மாநகராட்சி பூங்கா வளாகத்தில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக ரூ.1.94 கோடி மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நீச்சல் குளம், உடற்திறன் மற்றும் உடல் தளர்வு மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படுவதுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக பயன்படுத்தும் வகையில் குளிக்கும் வசதிகள் மற்றும் உடை மாற்றும் அறைகள் அமைக்கப்பட உள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
மேலும், குழந்தைகளுக்கென தனியாக சிறப்பு நிராடல் பகுதி அமைக்கப்பட உள்ளது. நீரின் தரம் மற்றும் குளோரின் அளவை சரிபார்க்கும் வசதிகளுடன் கூடிய தொட்டிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. கூடுதலாக, 50 இருசக்கர வாகனங்களும், 25 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிட வசதியும் அமைக்கப்பட உள்ளது.
இந்த நீச்சல் குளம், ஒரு மணி நேரத்திற்கு 50 பேர் என்ற சுழற்சி முறையில், ஒரு நாளுக்கு மொத்தமாக 500 பேர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளம் பொதுமக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
