இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் பலரும் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு சவாலாக ‘அதீத உணவு பசி’ (ஃபுட் க்ரேவிங்ஸ்) உருவெடுத்துள்ளது. உடலுக்கு உண்மையில் பசி இல்லாத நேரங்களிலும், சில குறிப்பிட்ட உணவுகளுக்கான கடும் ஆசை மனதை ஆட்கொள்வது இப்போது சாதாரணமாகிவிட்டது. இது உடல் தேவையை விட மனநிலை, பழக்கங்கள் மற்றும் சுற்றியுள்ள சூழல் காரணமாக அதிகம் ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த உணவு பசியை சரியான முறையில் கட்டுப்படுத்தினால், உடல் எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய், தேவையற்ற கொழுப்பு சேர்வது போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடியும் என டாக்டர் அருண்குமார் விளக்குகிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பது: அதீத உணவு பசியை கையாள்வதில் முதல் படியாக, அதைத் தூண்டும் காரணங்களை அடையாளம் காண வேண்டியது அவசியம். மன அழுத்தம், சலிப்பு, மனவருத்தம், போதிய தூக்கம் இல்லாமை அல்லது குறிப்பிட்ட நேரங்களில் ஏற்படும் பழக்க வழக்கங்கள் உணவு பசியை அதிகரிக்கக் கூடியவை. அதன் பின்னர், அந்த நேரத்தில் மனதில் தானாக எழும் எண்ணங்களை கவனிக்க வேண்டும்.

“இதை சாப்பிடாமல் இருக்க முடியாது”, “இப்போதே சாப்பிட்டால் தான் மனம் அமைதியாகும்” போன்ற எண்ணங்கள் உணவு பசியை இன்னும் தீவிரமாக்குகின்றன. உண்மையில் இந்த உணவு தேவைப்படுகிறதா, அல்லது இது சில நிமிடங்களில் மறைந்து விடும் ஆசையா என்பதை உங்களிடமே நேர்மையாக கேட்பது உதவியாக இருக்கும்.

உணவு பசி தோன்றும் நேரங்களில் உடனே சாப்பிடுவதற்குப் பதிலாக, சிறிது நடைப்பயிற்சி செய்வது, தண்ணீர் குடிப்பது, இசை கேட்பது அல்லது நண்பருடன் பேசுவது போன்ற மாற்று செயல்களை முயற்சி செய்யலாம். ஃபுட் க்ரேவிங்ஸ் வந்ததும் உடனே சாப்பிடாமல் 10 நிமிடங்கள் காத்திருந்தால், அந்த ஆசை தானாகவே குறைந்து விடும் வாய்ப்பு அதிகம்.

வீட்டில் அதிக அளவில் ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை வைத்திருப்பதை தவிர்த்து, பழங்கள், காய்கறிகள், நட்ஸ் போன்ற சத்தான உணவுகளை எளிதில் கிடைக்கும் இடங்களில் வைக்கலாம்.

நல்ல பழக்கங்களை உறுதிப்படுத்திக் கொள்வதே நீண்டகால மாற்றத்திற்கான அடிப்படை. இதனுடன், போதிய தூக்கம், சரியான உணவு நேரம், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள், போதிய அளவு தண்ணீர் குடித்தல், மன அழுத்தத்தை குறைக்கும் தியானம் மற்றும் யோகா போன்ற செயல்களும் அதீத உணவு பசியை கட்டுப்படுத்த உதவுகின்றன என்கிறார்.