தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய ஏதுவாக கோவை கொடிசியா டி ஹாலில் மதி கண்காட்சி – சரஸ் மேளா நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி ஜனவரி 1ஆம் தேதி வரை நடைபெறும்.

கண்காட்சியில் பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து மகளிர் சுய உதவி குழுக்கள் தங்களது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி உள்ளனர்.

மேலும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தின் பிரத்தியேக பொருட்களான காஞ்சிபுரம் பட்டு, திருவண்ணாமலை ஆரணி பட்டு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, மற்றும் கண்ணாடி ஓவியம், திருநெல்வேலி பத்தமடை பாய், மற்றும் மதிப்புக் கூட்டுப் பொருட்கள், இராமநாதபுரம் பனைஓலை பொருட்கள், திருப்பூர் காட்டன் ஆயத்த ஆடைகள், திண்டுக்கல் சின்னாளபட்டி சேலைகள், சிவகங்கை செட்டிநாடு காட்டன் சேலைகள், செங்கல்பட்டு சணல் பொருட்கள், நாமக்கல் கொல்லிமலை மிளகு, அரியலூர் மற்றும் கடலூர் முந்திரி, கோவில்பட்டி கடலை மிட்டாய், மற்றும் உடன்குடி கருப்பட்டி போன்ற பல்வேறு வகையான பொருட்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்காட்சியில் பங்கேற்கும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தங்களது சந்தைப்படுத்துதல் உத்திகளை மேலும் வலுப்படுத்த ஏதுவாக கண்காட்சி நாட்களில் காலை 11.30 முதல் 1.00 மணி வரை மகளிர் பயன்பெறும் வகையில் பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் மூலம் பயிற்சி நடைபெறுகிறது.

