– துணை காவல் ஆணையர் ஸ்டாலின். 

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுநிலை முதலாமாண்டு வரவேற்பு விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை மாநகர வடக்கு கோட்ட துணை காவல் ஆணையர் ஸ்டாலின், சூழ்நிலைகளைக் காரணம் காட்டாமல் உழைத்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்று மாணவர்களிடம் கூறினார்.

அவர் பேசியதாவது: ‘மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கான நோக்கம், சமுதாய மாற்றத்திற்கானதாக இருக்க வேண்டும். மாணவர்கள் பெறும் கல்வி இந்த சமுதாயத்தை ஒருபடி முன்னோக்கி நகர்த்துவதாக இருக்க வேண்டும். பணம் சம்பாதிக்கும் நோக்கமாகக் கல்வி இருக்கக் கூடாது. பெரும்பாலும் நம்முடைய எண்ணம் எதிர்மறையானதாக இருக்கிறது. நேர்மறை எண்ணம் இருப்பதில்லை. தெளிவான சிந்தனைகளில் இருந்தே, உயர்வான எண்ணங்கள் பிறக்கின்றன. உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். உங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்.நாம் யார்? என்று அடிக்கடி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தாழ்வு மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும். நம்முடைய பலம், பலவீனங்களை அறிந்து கொண்டு, பலவீனங்களைப் படியாகக் குறைக்க வேண்டும். திட்டமிடல் இல்லாமல் வெற்றி பெற இயலாது. குறுகிய கால திட்டம், நீண்டகால திட்டம் வகுத்து அதை நோக்கி முன்னேற வேண்டும். ’இவ்வாறு பேசினார்.

அதைத்தொடர்ந்து எம்.பி.ஏ. துறை மாணவர்கள், முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களுடனான முக்கிய சந்திப்பு நிகழ்வுகளின் தொகுப்புகள் அடங்கிய இதழை, காவல் துணை ஆணையர், டாக்டர் ஸ்டாலின் வெளியிட, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் பெற்றுக் கொண்டார். மேலும், கோவை ரைபிள் கிளப்பில் நடைபெற்ற, 49-ஆவது துப்பாக்கி சுடுதல் போட்டி, 50 மீட்டர் புரோன் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற, முதலாமாண்டு எம்.பி.ஏ. மாணவர் திவாகர், 50 மீட்டர் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் வெண்கலப்பதக்கம் வென்ற பி.காம். மாணவி ஆதர்ஷிகா ஆகியோர் விழாவில் பாராட்டப்பட்டனர். இதில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.