சமீப நாட்களாக தந்தூரி சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வரும் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இது உண்மையா என்ற சந்தேகத்திற்கு மருத்துவர் அருண்குமார் தனது சமூக வலைதளப் பதிவில் அறிவியல் ரீதியான விளக்கத்தை அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: பார்பிக்யூ, தந்தூரி, க்ரில் போன்ற முறைகளில் இறைச்சியை நேரடியாக தீயில் சுட்டு சமைக்கும் போது, அதில் இரண்டு வகையான வேதியியல் சேர்மங்கள் உருவாகுகின்றன. அவை ஹெட்ரோசைக்ளிக் அமின்ஸ் (HCA) மற்றும் பாலிசைக்ளிக் அரோமடிக் ஹைட்ரோகார்பன்ஸ் (PAH).

சுமார் 150 டிகிரி செல்ஷியஸ் அல்லது அதற்கு மேற்பட்ட வெப்பத்தில் இறைச்சி தீயில் நேரடியாக வேகவைக்கப்படும்போது, குறிப்பாக அதன் மேல் உருவாகும் கருகிய கருப்பு பகுதிகளில் இந்த சேர்மங்கள் அதிகமாக உருவாகுகின்றன. இந்த இரண்டுமே புற்றுநோயை உருவாக்கக் கூடும் என சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், அந்த ஆய்வுகளில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். இந்த இரு வேதியியல் சேர்மங்களும், எலிகளில் பரிசோதனை செய்யப்பட்டன. மேலும், நாம் உட்கொள்ளும் HCA, PAH அளவுகளைவிட 1,000 மடங்கு அதிகமான டோசேஜ் வேதியியல் சேர்மங்கள் எலிகளில் செலுத்தப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அப்போதுதான் புற்றுநோய் அபாயம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாம் அவ்வப்போது தந்தூரி, க்ரில் அல்லது பார்பிக்யூ உணவுகளை சாப்பிடுவதால் அந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட அளவிற்குச் சமமான ரசாயனங்களை உடலில் சேர்த்துக் கொள்வது நடைமுறையில் சாத்தியமில்லை. எனவே, இதனால் உடனடியாக அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என மருத்துவர் விளக்குகிறார்.

அதே நேரத்தில், அமெரிக்காவில் அதிகமாக தந்தூரி வகை உணவுகளை சாப்பிடுவோர் மற்றும் குறைவாக சாப்பிடுவோர் இடையே செய்யப்பட்ட ஒரு ஆய்வில், அதிகம் சாப்பிடுவோருக்கு புற்றுநோய் அபாயம் மிதமான அளவில் சற்று உயர்வது காணப்பட்டது.

ஆனால் இதற்கு மாறாக, 20 ஆண்டுகளுக்கு மேலாக சிவப்பு இறைச்சி, தீயில் வாட்டப்பட்ட இறைச்சி மற்றும் மேற்சொன்ன இரு ரசாயனம் உள்ள இறைச்சி உணவுகளை எடுத்துக் கொண்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் மத்தியில்  செய்யப்பட்ட ஆய்வில், புற்றுநோய் அபாயம் உறுதியாக அதிகரித்ததாக எந்தத் தெளிவான ஆதாரமும் கிடைக்கவில்லை.

இதேபோல் பல ஆய்வுகளின் முடிவுகளை ஒருங்கிணைத்து 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்விலும், ‘இந்த வகை உணவுகளில் புற்றுநோய்க்கான காரணி அதிகம் இருப்பதாக தெரியவரவில்லை’ என்றே கூறப்பட்டுள்ளது.

எனவே, தந்தூரி, க்ரில், பார்பிக்யூ பிரியர்கள் அதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. வேண்டுமானால், தந்தூரியின் மீது காணப்படும் கருகிய கருப்பு பகுதிகளை நீக்கிவிட்டு சாப்பிடலாம் என விளக்கியுள்ளார்.