நாடு முழுவதும் ஸ்மார்ட்போன் பயனர்கள் எண்ணிக்கை வேகமாக உயரும் நிலையில், அதற்கு ஏற்ப சைபர் குற்றங்களும் பெருகி வருகின்றன. புதுப்புது வடிவங்களில் ஆன்லைன் மோசடிகளில் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இதனால் பலர் பணத்தையும், தனிப்பட்ட தகவல்களையும் இழந்து வருகிறார்கள்.
இதைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும், குற்றங்கள் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் சைபர் குற்றங்களில் இருந்து மக்களை காக்க மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, சைபர் குற்றங்கள், ஹேக்கிங், ஆன்லைன் மோசடிகள் உள்ளிட்டவற்றை தடுக்கும் நோக்கில், புதிதாக விற்கப்படும் அனைத்து வகை ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாத்தி எனப்படும் செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, ஆப்பிள், சாம்சங், கூகுள், விவோ, ஓப்போ மற்றும் சியோமி உள்ளிட்ட அனைத்து முக்கிய மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கும் இது பொருந்தும். இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் சாதனங்களை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடந்த நவம்பர் 28ம் தேதி இதுதொடர்பான உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. புதிய செல்போன்களில் இந்த செயலியை நிறுவ 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களிலும் இந்த செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என கூறியுள்ளது. இந்த செயலியை பிளேஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் பதிவிறக்கம் செய்யலாம்.
பொதுமக்கள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி வடிவமைக்கப்பட்ட சஞ்சார் சாத்தி, தொலைத்தொடர்பு துறையின் சைபர் பாதுகாப்பு விதிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு தொலைபேசியின் ஐ.எம்.இ.ஐ எண் கருப்புப் பட்டியலில் உள்ளதா, தடைவிதிக்கப்பட்டதா அல்லது சந்தேகப் பட்டியலில் உள்ளதா என்பதை வாங்குவதற்கு முன் பயனர்கள் சரிபார்க்கலாம்.
இந்த செயலியின் மூலம் ஐ.எம்.இ.ஐ மோசடி, தொலைந்துபோன அல்லது திருடுபோன செல்போன்களை கண்டறியவும், ஒருவர் பெயரில் பயன்பாட்டில் உள்ள சிம் கார்டுகளின் விவரம், இந்திய எண்ணுக்கு வரும் சர்வதேச அழைப்புகள் குறித்தும் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சஞ்சார் சாத்தி ஒரு உளவு பார்க்கும் செயலி என்றும், இது மிகவும் அபத்தமானது என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
தொலைந்து போன, திருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடிக்கவும், போலியான மற்றும் மோசடியான அழைப்புகள் குறித்து புகார் அளிக்கவும் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி சஞ்சார் சாத்தி இணையதளத்தையும், கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி செயலியையும் மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. சஞ்சார் சாத்தி செயலி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து தற்போது வரை மொத்தம் 41 லட்சத்து 84 ஆயிரத்து 558 புகார்கள் வந்துள்ளன. இவற்றில் 7,13,673 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
