அதிமுகவில் இருந்து வந்தவருக்கு கீழ் பணியாற்ற முடியாது என திமுக நிர்வாகி கூறியதற்கு, ‘செந்தில் பாலாஜி கூட அதிமுகவில் இருந்து வந்தவர் தான், அதுக்கு என்ன பண்ண முடியும்’ என கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.

அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்துள்ள முரளிக்கு கீழ் தான் பணியாற்ற விரும்பவில்லை என திமுக நிர்வாகி ஒருவர் தொண்டாமுத்தூர் ரவி யிடம் தெரிவித்துள்ளார். இதனால் கோவம் அடைந்த அவர், செந்தில் பாலாஜியே அதிமுகவில் இருந்து வரவில்லையா என கேட்டு வாக்குவாதம் செய்த ஆடியோ வெளியாகியுள்ளது.

அந்த ஆடியோவில்,

நிர்வாகி: என்னங் அண்ணா இப்படி பண்ணி போட்டிங்க.

மா.செ: உங்க செயலாளர் தானா விட்டுருங்க.

நிர்வாகி: முரளிக்கு கீழ் எனக்கு வேண்டாம். வேற யாராச்சும் போட்டு இருக்கலாம். அவன் ஏற்கனவே அதிமுக காரன்.

மா.செ: ஒவ்வொன்னும் இப்படி பாத்துட்டு இருக்க முடியாது. செந்தில் பாலாஜி கூட அதிமுக தான். அதுக்கு நம்ம என்ன பண்ண முடியும்.

நிர்வாகி: அவர் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்துட்டாரு.

மா.செ: கட்சிக்காக வந்து வேலை செய்யுங்க. எனக்காக பண்ணுங்க, இல்லைனா விட்டுருங்க.

நிர்வாகி: நான் கட்சிக்கு கண்டிப்பா வேலை செய்றேன். எனக்கு கொடுத்த சீட்டை ஒருத்தன் காசு குடுத்து வாங்கி இருக்கான். ஏற்கனவே தொடர்ந்து ரெண்டு முறை தோத்துட்டாரு.

மா.செ: எஸ்.பி.வேலுமணி காசு கொடுத்து தான் பதவி வாங்குனாரு.

நிர்வாகி: மக்கள் மத்தியில் அவர் ஜெயிச்சாரு. இவர் ஏற்கனவே போன முறையும் தோத்தாரு.

மா.செ: நான் முடிவு பண்றது 30%  தான். 70% ஐ பேக், பேன் டீம் இவங்க எல்லாம் சேர்ந்து தான் முடிவு பன்றாங்க.

நிர்வாகி: பரவ இல்ல… அத நீங்க பண்ணிட்டு போங்க. எனக்கு செயலாளர் வேண்டாம். கட்சிக்காக, உங்களுக்காக நான் வேலை செய்றேன். எனக்கு செயலாளர் மட்டும் வேண்டாம்.

இவ்வாறு உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.