தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் வரும் 19ம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கோவை பிரஸ் கிளப்பில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: வரும் நவம்பர் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்களில் கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
50 வேளாண் விஞ்ஞானிகளுடன் தனி அரங்கில் கலந்துரையாடல் செய்கிறார். மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 5000க்கும் மேற்பட்ட விவசாயிகளில் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டில் மண் மலட்டுத்தன்மை குறித்தும், மண்ணில் அதிகளவில் நச்சுத்தன்மை உள்ளதால் உணவுப் பொருட்கள் பாதிப்படைந்து வருவதாகவும், இயற்கை விவசாயம் குறித்தும் மண் வளத்தை மேம்படுத்த இந்த மாநாடு நடைபெற உள்ளதாகவும், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பிரதமர் மோடியிடம் தீர்மானங்களை வழங்க இருப்பதாகவும் கூறினார்.
பிரதமர் மோடி மாநாட்டில் கலந்து கொள்வதால் உலகம் முழுவதும் இயற்கை விவசாயம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். அதேபோல் மத்திய, மாநில அரசுகள் இயற்கை விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்க மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் வெறும் பத்து சதவீதம் மட்டும் தான் இயற்கை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கடைகளில் ஆர்கானிக் பொருட்களை இயற்கை விவசாயம் என்று கூறி விற்பனை செய்து வருகிறார்கள். இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. இந்த மாநாடு மூலம் பொதுமக்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும்.
நச்சுத்தன்மை மற்றும் கெமிக்கல் பயன்படுத்தி விவசாயம் செய்வதினால் பல்வேறு நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதனை முற்றிலும் தடுத்து இனி வருங்காலங்களில் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
