ஆன்மீகத்தில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் கார்த்திகை மாதம் தீப வழிபாட்டிற்குரிய மாதம் ஆகும். கார்த்திகை மாதம் பிறந்த உடனேயே ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விடுவார்கள். முதல் நாள் அன்றே கருப்பு அல்லது காவி நிற உடை உடுத்தி, துளசி மணி மாலை அணிந்து விரதம் இருப்பார்கள்.
2025ம் ஆண்டிற்கான கார்த்திகை மாதம் நவம்பர் 17ம் தேதி திங்கட்கிழமை பிறக்கிறது. இந்த ஆண்டு கார்த்திகை முதல் நாள் சோமவார பிரதோஷ தினமாக அமைவது மிக விசேஷமாக உள்ளது. சிவபெருமானுக்குரிய பிரதோஷ நாளில், சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்குவது சிறப்புக்குரியது.
பிரதோஷ தினத்தில் கார்த்திகை முதல் நாள் வருவதால் அன்று எப்போது வேண்டுமானாலும் மாலை அணிந்து, ஐயப்ப பக்தர்கள் விரதத்தைத் தொடங்கலாம். ஆனால் ராகு காலம், எம கண்டம் தவிர்த்து மற்ற நேரத்தில் மாலை அணிவது சிறப்பு. அன்று திங்கட்கிழமை என்பதால் காலை 7.30 முதல் 9 மணி வரை ராகு காலம், காலை 10.30 முதல் பகல் 12 வரை எமகண்டம் உள்ளது.
கார்த்திகை மாதம் என்பது ஐயப்பனுக்கு மட்டுமின்றி, சிவபெருமான், முருகப்பெருமானுக்கும் உகந்த மாதம். அதனால் திருக்கார்த்திகை தீபத்திற்கு விரதம் இருப்பவர்களும் கார்த்திகை முதல் நாளில் விரதத்தை தொடங்கலாம்.
