தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 60வது மணிவிழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்துடன் தருமை ஆதீனம் மற்றும் ஆன்மீக அமைப்புகள் இணைந்து தமிழகமெங்கும் செயல்படுத்தவுள்ள கோவில் காடுகள் திட்டத்தின் துவக்க விழா வள்ளாலகரம் வதாரண்யேசுவரர் கோவிலில் நடைபெற்றது.
இதில் முதல் மரக்கன்றை தருமை ஆதீனத்தின் இளைய சந்நிதானம் தவத்திரு சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் நட்டு திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்வின் போது தருமை ஆதீனத்தின் நிர்வாகி பாலாஜி பாபு, ஈஷா யோக மையத்தைச் சேர்ந்த சன்னியாசிகள் சுவாமிகள் அலோகா, கைலாசா மற்றும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் திட்ட கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் ஆகியோர் உடனிருந்தனர்.
இது குறித்து சிவகுருநாத தம்பிரான் பேசுகையில், ஒவ்வொரு கோயிலிலும் இறைவன் மரத்தின் வடிவமாகவே இருக்கிறார் என்பது சைவ சமயத்தின் மற்றும் இந்தியப் பண்பாட்டின் நம்பிக்கை எனக் கூறினார்.
கோவில் காடுகள் திட்டம் குறித்து தமிழ்மாறன் பேசுகையில்: பருவநிலை மாற்றத்தால் அதிக வெப்பம், அதிக மழை போன்ற சிக்கல்கள் தொடர்ந்து வருகின்றன. நம் முன்னோர்கள் இதை உணர்ந்துதான், கோவில் காடுகளை அமைத்தனர்.
தமிழ்நாட்டில் ஏறத்தாழ 12,000-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் முன்பு கோவில் காடுகள் இருந்தன. இதுதான் தமிழகத்தில் பருவநிலையைச் சீராகப் பேணி வந்தது. நம் சுய தேவைக்காக இந்தக் காடுகளை அழித்துவிட்டோம். அவற்றை மீண்டும் உருவாக்கும் கடமை நமக்கு இருக்கிறது.
இந்த திட்டத்தில் அந்தந்த பகுதிகளில் மண், நீரின் தன்மையை ஆய்வு செய்து, மண்ணுக்கேற்ற நாட்டு மரங்களை காவேரி கூக்குரல் இயக்கம் இலவசமாக வழங்கும் எனக் கூறினார்.
