தமிழை தாயாக நேசித்த பெரியோர் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் ஔவையார். தமிழின் அறிவை உலகம் அறியச் செய்த அந்தப் பெண் புலவர் முருகனுக்கே அறிவுப் பாடம் புகட்டியவர். அதியமானுக்காக நெல்லிக்கனி வழங்கிய அவருக்கு கன்னியாகுமரியில் கோவில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆரல்வாய்மொழியை அடுத்த தாழக்குடி பூதப்பாண்டி செல்லும் சாலையில் அமைந்துள்ளது நெல்லிமடம் ஔவையார் அம்மன் கோவில். சுமார் 500 ஆண்டுகள் பழமையான இக்கோவில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் அகத்தியர், சுடலை மாடன், விநாயகர், முருகப்பெருமான் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.
இந்த கோவிலில் நடக்கும் ஆடி மாத பூஜை சிறப்பு வாய்ந்ததாக அறியப்படுகிறது. குறிப்பாக ஆடி செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் பெருமளவில் வந்து வழிபடுகிறார்கள். பெண்கள் விரதமிருந்து கொழுக்கட்டை படைத்து அம்மனை வழிபடுவார்கள். பச்சரிசி மாவு, சர்க்கரை, தேங்காய், ஏலக்காய் சேர்த்து தயாரிக்கும் அந்த கொழுக்கட்டை, அம்மனுக்கு படைக்கப்படும்.
குழந்தை பாக்கியம் வேண்டி வரும் பெண்கள் இங்குப் பிரார்த்தித்து, அம்மனுக்கு கொழுக்கட்டை படைத்தால் விரைவில் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதோடு திருமண தடை, குடும்ப சிக்கல், நினைத்த காரியம் நிறைவேறுதல் போன்றவற்றிற்காகவும் மக்கள் இங்கு வருகின்றனர்.
சுடலை மாடன் புராணக் கதையில் வரும் வீரப்புலையன், குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்தபோது ஔவையாரம்மனை வேண்டியதாகவும், அவரின் அருளால் குழந்தை பிறந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின் அந்தப் பகுதியில் பெண் குழந்தைகளுக்கு ஔவையார் என்று பெயர் வைக்கும் வழக்கம் உருவாகி இன்று வரை தொடர்கிறது.
முருகன் ‘சுட்டப் பழம் வேண்டுமா? சுடாதப் பழம் வேண்டுமா?’ என்று கேட்டு விளையாடிய இடம் இதுவே என சிலர் கூறுகின்றனர். அதற்குச் சாட்சி போல இன்றும் கோவிலருகே ஒரு குளமும் நாவல்பழ மரமும் உள்ளன. மேலே சிறிய குன்றில் முருகப்பெருமான் சன்னதி உள்ளது.
