சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் என்.சி.சி. தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த கர்னல் சி.எஸ்.டி சுவாமி கலந்துகொண்டார்.
பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி, பள்ளிச் செயலர் கவிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தீபிகா மற்றும் கௌதம் ராம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட தடகளம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் அக்னி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தினைப் பெற்றது. வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்குக் கோப்பை, கேடயங்களை வழங்கி சிறப்பு விருந்தினர் பேசுகையில்:
ஒரு குறிக்கோளை மனதில் வைத்துக்கொண்டு, அதனை அடைவதற்கு தகுதி இருக்கிறதா? அதை எப்படி வளர்த்துக்கொள்ள வேண்டும்? என்று சிந்தியுங்கள். அதற்கான வழிகாட்டல் ஏதாவது ஒரு வகையில் உங்களை வந்து சேரும்.
ஏதாவது பத்துத் துறைகளைப் பட்டியலிட்டு, ஓராண்டிற்குப் பிறகு அவற்றை ஒரு முறை பார்த்து, எந்தத் துறைக்குச் செல்ல நாம் தகுதியாகிக்கொண்டிருக்கிறோம் என்று ஆராய வேண்டும். நாளடைவில் உங்களுக்கென ஒரு துறையை தேர்ந்தெடுத்துவிட்டிருப்பீர்கள். அவ்வாறு செய்யத் தொடங்கும் போதே சாதனை புரிவதற்கான பாதையில் சென்றுகொண்டிருக்கின்றீர்கள் என்பது புரியத் தொடங்கும் என்று பேசினார்.
விழாவில் பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சிறப்பு விருந்தினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

