கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பாக, புற்றுநோயுடன் மனவுறுதியுடன் போராடி குணமடைந்தவர்களையும், நோயிலிருந்து மீண்டுவர அவர்களுக்கு உதவிகரமாக செயல்பட்டவர்களையும் பாராட்டும் வகையிலும் புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் 2013 ஆம் ஆண்டு முதல் வருடா வருடம் ரோஸ் தினம் கொண்டாடப்படுகிறது.
புற்றுநோய் பற்றிய தேவையற்ற அச்சவுணர்வைத் தவிர்த்து, நோயாளிகள் நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வருட ரோஸ் தினம் ‘புது வாழ்வு!’ என்ற கருத்தாக்கத்துடன் கொண்டாடப்படுகிறது.
ரோஸ் தின விழாவை முன்னிட்டு கே.எம்.சி.ஹெச் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், அவர்கள் குடும்பத்தினர், மருத்துவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
புற்றுநோயாளிகளின் அனுபவம் மற்றும் கே.எம்.சி.ஹெச் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் உள்ள உலகத்தரமான சிகிச்சை வசதிகள் குறித்து விளக்கும் வீடியோ படம் திரையிடப்பட்டது.
மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி விழாவிற்கு தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். பிரபல பேச்சாளர் ஜெயந்திஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
காது, மூக்கு, தொண்டை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் திவாகர், தனது வரவேற்புரையில் சப்போர்ட் குரூப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த் நாராயணன் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு உரையாற்றினார். மருந்தியல் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ராம்குமார் நன்றி உரை வழங்கினார்.
