கோவை மாநகராட்சியில் 1937 சாலை பணிகள் 277.13 கி.மீ நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பது: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள மண் சாலைகள் மற்றும் பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்க தமிழக அரசால் ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி, சுமார் 3456 எண்ணிக்கையிலான சாலைப்பணிகள் சுமார் 503.67 கி.மீ நீளத்திற்கு மேற்கொள்ளப்படுகின்றன.

அதில் முதற்கட்டமாக, 1937 எண்ணிக்கையிலான 277.13 கி.மீ நீளத்திற்கு சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது மேலும், 1519 பணிகள், சுமார் 226.54 கி.மீ நீளத்திற்கு சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டம்,  நகர்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டம், மாநில நிதிகுழு சிறப்பு நிதி ஆகிய  திட்டங்களின் கீழ் 5215 எண்ணிக்கையிலான பணிகள் 860.69 கிமீட்டர் நீளத்திற்கு ரூ.415.06 கோடிக்கு மதிப்பீட்டில் எடுக்கப்பட்டு அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.