திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கதிற்கான அடுத்த 3 ஆண்டுகளுக்கான தலைவர் உள்ளிட்ட நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மீண்டும் சுப்பிரமணியன் தலைவராகவும், ராஜ்குமார் ராமசாமி மற்றும் இளங்கோவன் துணை தலைவர்களாகவும், திருக்குமரன் பொதுசெயலாளராகவும், கோபாலகிருஷ்ணன் பொருளாளராகவும், குமார் துரைசாமி மற்றும் ஆனந்த் முத்துசாமி இணை செயலாளர்களாவும் மற்றும் 30 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் 22 அன்று நடைபெறும் பொதுகுழு கூட்டத்தில் தேர்வு செய்யபட்ட அனைவரும் பதவி ஏற்க உள்ளனர்.
ஏற்றுமதி அளவை இரட்டிப்பாக்குவோம்!
சுப்பிரமணியன் கூறுகையில்: கடந்த மூன்று ஆண்டுகளில் திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி வலிமையை, குறிப்பாக வளம் குன்றா உற்பத்தி திறனை உலகளவில் எடுத்து சென்றுள்ளோம். தொழிலில் ஏற்படும் இன்னல்களை போக்க மத்திய மாநில அரசுகளுடன் தொடர்ந்து பேசி வேண்டிய உதவிகளை பெற்று தந்துள்ளோம்.
உறுப்பினர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க 2 நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளது. செயற்கை நூலிழை துணிகள், ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
தொழில் பங்களிப்போர் கூட்டமைப்பை உருவாக்கி இறக்குமதியாளர்கள் முதல் தொழிலாளர்கள் வரை சுமுகமாக தொழிலை மேற்கொள்ள பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுப்பினர்கள் கொடுத்த அங்கீகாரம் மட்டுமல்ல, அவர்கள் எங்கள் மீது வைத்துள்ள பெரும் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை கூடுதல் பணிவுடன் ஏற்று, அடுத்து வரும் 3 ஆண்டுகள் தற்போதைய ஏற்றுமதி அளவை காட்டிலும் இரட்டிப்பாக்க உரிய முயற்சிகளை மேற்கொள்வோம்.
தற்சமயம் அமெரிக்க வரிவிதிப்பு காரணமாக பல நிறுவனங்கள் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிலையிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். தொழிலும், ஊரும் வளர திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தொடர்ந்து துணை நிற்கும் என்றார்.
