ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியின் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வுக்காக மாபெரும் பேரணி நடைபெற்றது. பேரணியை கோவை மாவட்டக் காவல்துறை ஆணையாளர் கோகுல கிருஷ்ணன் மற்றும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியிலிருந்து, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வரை போதைப்பொருள் எதிர்ப்புப் பதாகைகளை ஏந்தி, முழக்கங்களை எழுப்பியபடி மாணவிகள் பேரணியாகச் சென்றனர்.
போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள், பேரழிவுகள் பற்றி உணர்த்தி, போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதை மையமாகக் கொண்டு மாணவிகள் நாடகம் நடத்தினர்.
கல்லூரி முதல்வர் சித்ரா, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் போதை என்னும் அரக்கனின் பிடியிலிருந்து நம் மக்களைக் காப்பாற்ற இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து எங்கள் மாணவிகள் முன்னெடுப்பார்கள் என்று தெரிவித்தார்.
பேரணியில் காட்டூர் சி1 காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அலுவலர் மகேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
