கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்கள், விஷேச நாட்களில் பக்தர்களின் வருகை அதிகம் காணப்படும். இதனால் கூட்ட நெரிசல் கட்டுப்பாடு, போக்குவரத்து ஏற்பாடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
இடப்பற்றாக்குறை காரணமாக கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மலையேற அனுமதிக்கப்படுவதில்லை. சுமார் 40 கார்கள், 100 இரு சக்கர வாகனங்கள் மட்டுமே நிறுத்த முடியும். வாகன நிறுத்துமிடத்தின் பெரும்பகுதி மேம்பாட்டுப் பணிகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது வாகனங்கள் மலையடிவாரத்திற்கு 500 மீட்டர் முன்னதாக நிறுத்தப்பட்டு தற்காலிக வாகன நிறுத்துமிடத்திற்கு திருப்பி விடப்படுகின்றன. இதனால் பக்தர்கள் படிக்கட்டுகளைப் பயன்படுத்த வேண்டும் அல்லது கோவில் நிர்வாகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் செல்லவேண்டும்.
ஆனால் மலை உச்சிக்கு, பேருந்து செல்ல தாமதம் ஏற்படுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் பேருந்துக்காக வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதால் இருக்கை ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
செவ்வாய் மற்றும் வார இறுதி நாட்களில் கோவில் நிர்வாகத்தால் மூன்று பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆடிப் பெருக்கை முன்னிட்டு நேற்று 20,000 க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வருகை தந்தனர். ஏராளமானோர் வருகை தருவதால், பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மருதமலை கோவிலில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்கும் இட நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கும் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் பிரத்யேக வாகன நிறுத்துமிடம், கோவில் பேருந்துகளுக்கான பேருந்து நிலையம் மற்றும் மலையடிவாரத்தில் அடிப்படை வசதிகள் ஆகியவை இடம்பெறும்.
