ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் ஆகியவை இணைந்து நடத்தும், “அல்மாபிரனர்ஸ் -2025” என்ற 5 நாள் மாணவத் தொழில்முனைவோர் மாநாடு 5.0, கல்லூரி கலையரங்கில் தொடங்கியது.
கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களும், முன்னாள் மாணவர்களுமான பெங்களூரு 4எஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரமோகன், குட்லைஃப் டூர்ஸ் அண்டு டிராவல்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் மோகன்குமார், ஆகியோருக்கு “வளர்ந்து வரும் முன்னாள் மாணவத் தொழில்முனைவோர்” விருது வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள் பேசும்போது, படிக்கும் போதே மாணவர்கள் தொழில்முனைவுத் திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி? எவ்வாறு தொழில்முனைவோர்களாக உருவாகுவது? முன்னாள் மாணவத் தொழில்முனைவோர்களின் வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் பெறுவது எப்படி? என்று விளக்கிப் பேசினர்.
ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடைபெறும் மாநாட்டில், கல்லூரி முன்னாள் மாணவர்களான மகாலட்சுமி மில்ஸ் நிர்வாக இயக்குநர் விஜய் பட்டேல், இன்டல்லிஸ்வட் டெக்னாலஜீஸ் நிறுவன செயல் இயக்குநர் சுஹாலே, சுரபி புல்லியன் நிர்வாக இயக்குநர் வாசுதேவன், ஜூட் பேக்ஸ் உரிமையாளர் சில்வியா ரோஸ்லின், தி பால்ம்ஸ் ரிடர்ன் கிப்ட்ஸ் உரிமையாளர் ரேணுகா சுமன், டி.எம்.சிஸ். கிப்ட்ஸ் அண்டு கிராப்ட்ஸ் உரிமையாளர் ஆனந்தி ஸ்ரீகாந்த், சிந்தியா பிளாஸ்டிக்ஸ் தலைமை செயல் அலுவலர் சுரேஷ் சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.
மாநாட்டில் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் செந்தில்குமார், முன்னாள் மாணவர் சங்கச் செயலர் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
