கோவையில் சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான கிளஸ்டர் கால்பந்து போட்டி ரத்தினம் பப்ளிக் பள்ளி சார்பாக ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 14, 16, 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் 450-க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ பள்ளி அணிகளைச் சேர்ந்த 9000 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதற்கான தொடக்க விழா ரத்தினம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவர் மதன் செந்தில் தலைமையில் நடைபெற்ற விழாவில், இயக்குனர் ஷிமா செந்தில் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன் கலந்துகொண்டு போட்டிகளை துவக்கி வைத்து பேசுகையில்: அனைத்துத் துறைகளிலும் வேகமாக வளர்ந்து வரும் கோவை, தற்போது விளையாட்டுத் துறையிலும் தமிழக அளவில் முக்கிய இடமாக மாறி வருகிறது. சர்வதேசத் தரத்தில் உருவாகி வரும் ஹாக்கி மைதானத்தின் பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் மதன் செந்தில் கூறுகையில்: கோவையில் முதன்முறையாக மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கிளஸ்டர் கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. பத்து இடங்களில் போட்டிகள் நடைபெறுவதாகத் தெரிவித்தார்.