கோவை அருகே பாக்கெட்டுகளில் கள் விற்பனை நடைபெறும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழகத்தில் கள் இறக்கவும், விற்பனை செய்யவும் தடை உள்ளது. அதை மீறி கள் இறக்கி விற்பவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது. பல அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கோவை அடுத்த பேரூர் அருகே காளாம்பாளையத்தில் இருந்து நொய்யல் ஆற்றுக்குச் செல்லும் வழியில் உயர்மட்ட பாலம் உள்ளது. இதன் அருகே ஏராளமான பாக்கு, தென்னை, வாழை மரங்கள் உள்ளன. இங்கு உள்ள ஒரு சில தென்னந்தோப்புகளில் காலை, பிற்பகல் நேரங்களில் கள் இறக்கப்படுகிறது.

அதை வாங்கி குடிக்க கள் பிரியர்கள் தென்னந்தோப்புகளை நோக்கி படையெடுக்கின்றனர். தடையை மீறி பேரூர் பகுதியில் கள் விற்பனை நடந்து வருகிறது. குறிப்பாக வார நாட்களை விட ஞாயிற்றுக்கிழமைகள் அன்று விற்பனை விறு விறுப்பாக நடக்கிறது. இதனால் கள் வாங்க வருபவர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

குறிப்பாக ஏற்கனவே மரத்தில் இருந்து இறக்கிய கல்லை பாக்கெட்டுகளில் அடைத்து உடனுக்குடன் விற்பனை செய்து வருகின்றனர். தோட்டங்களில் சர்வசாதாரணமாக அமர்ந்து கள் குடிக்கவும், இடவசதி செய்யப்பட்டுள்ளது. மரத்தில் இருந்து கல்லை இறக்கி கொண்டு வந்ததும், ஆர்வமுடன் வாங்கி குடிப்பதை காண முடிகிறது.

பிளாஸ்டிக் கப்புகளில் ஒரு லிட்டர் கள் ரூ.120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தோட்டத்து மரத்தில் இருந்து இறக்கி நேரடியாக விற்பனை செய்வதால் அதை குடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் பேரூர் பகுதியில் கள் விற்பனை நடப்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் முறையாக ரோந்து செல்கிறார்களா அல்லது காவல் துறையினர் ஆதரவுடன் கல் விற்பனை நடைபெறுகிறதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.